வைரம்
வெந்தணைந்த கரியினிலே
வைரம் சுட்டும் கண்ணினிலே
பிறக்குமாமொரு தீப்பொறி!

ஒளிபிடிக்கும் வைரமதில்
கரிகாணும் கண்ணினிலே
பிறக்குமாமொரு தீப்பொறி!

கோளத்தின் அடுப்பினிலே
ஒளிசமைக்கும் நெருப்பினிலே
கரியிறக்கும் வைரமாக!

ஞாலத்தின் அடுப்பினிலே
சுவைசமைக்கும் நெருப்பினிலே
கரியிறக்கும் வயிறுகளாய்!

ஒளியை மீட்டும் வைரம் சிறப்பா?
ஒளியாய் எரியும் கரிதான் சிறப்பா?
ஒளியை உண்ணும் விழியே சிறப்பா?

பிறந்து வரும் ஒளி பெரிதா?
இறந்து தரும் ஒளி பெரிதா?
துறந்து பெறும் வழி பெரிதா?

கரி அணியும் கலைகளிலும்,
ஒளி அணியும் கலைகளிலும்,
பிறப்புமுண்டு இறப்புமுண்டு!

இனிப்பிருக்க துவர்ப்பெதற்கு?
சுவைக்கத் தெரிந்த நாவினுக்கு
இனிப்பும் நன்று துவர்ப்பும் நன்று!